25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்


25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
x

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர்

டெல்டா பகுதிகளுக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது அதற்கான அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 4 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

விளைநிலங்கள் மூழ்கின

இந்த மழையின் காரணமாக திருவாரூர் அருகே காணூர், கீழ கூத்தங்குடி, கொட்டாரக்குடி, கல்யாணமகாதேவி, மாவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் வயல்களில் சாய்ந்தும், மழைநீரில் மூழ்கியும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் வயல்களில் அறுவடை எந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அறுவடை பணிகள் ஸ்தம்பித்துள்ளது. அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாரான சுமார் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் மழையினால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

இழப்பீடு

எனவே வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் மழையால் சேதமடைந்த வயல்களை கணக்கீடு செய்து இழப்பீடு கிடைக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story