25 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்
25 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாநகரில் வயலூர் பகுதியில் உள்ள ஒரு குடிநீர் பாட்டில் தயாரிப்பு நிறுவனத்தில் பி.ஐ.எஸ். உரிமம் 'ஸ்டாப் மார்க்கிங்' என்று இருந்த காரணத்தினால் அந்த நிறுவனத்தில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திருச்சி மாவட்ட நியமன அதிகாரி உத்தரவிட்டார். இந்தநிலையில் அந்த உத்தரவை மீறி அந்த நிறுவனத்தில் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் அந்த நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு தடையை மீறி குடிநீர் பாட்டில்கள் உற்பத்தி செய்வது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 25 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நிறுவன உரிமையாளர்கள் மீது உறையூர் போலீஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.