வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
தூத்துக்குடி சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரம் சாலை தெருவை சேர்ந்தவர் வக்கீல் திருமலை நம்பி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்றுள்ளார். வாகைகுளம் சுங்கச்சாவடியில் நுழைவு கட்டணமாக ரூ.65 வசூல் செய்துள்ளனர். அதன் பின்னரும் பாஸ்டேக்கில் இருந்து ரூ.65 வசூல் செய்துவிட்டனர். பின்னர் தூத்துக்குடியில் வேலைகளை முடித்து கொண்டு மீண்டும் நெல்லைக்கு திரும்பினர். அப்போதும் நேரடி நுழைவு கட்டணமாக ரூ.65 வசூல் செய்துள்ளனர். அதே சமயத்தில் வாகனத்தில் உள்ள பாஸ்டேக்கில் இருந்தும் கட்டணம் பெற்றுள்ளனர்.
எனவே கூடுதலாக பெற்ற பணத்தை திருப்பி தர கேட்டு சுங்கச்சாவடிக்கு திருமலை நம்பி கடிதம் எழுதி உள்ளார். ஆனால் பணத்தை தர மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான திருமலை நம்பி, வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிபதி கிளாடஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் விசாரித்து, திருமலை நம்பிக்கு சுங்கச்சாவடி நிர்வாகம் ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.