நெரிசலில் சிக்கி பலியான 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரம்
நெரிசலில் சிக்கி பலியான 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரம் தேவராஜி எம்.எல்.ஏ. வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நேற்று முன்தினம் தனியார் நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்குதற்காக டோக்கன் வினியோகம் செய்யப்பட இருந்தது. டோக்கன் பெற பொதுமக்கள் முண்டியடித்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவரான கொத்தகோட்டை ஊராட்சி, குரும்பட்டி பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (வயது 70) உயிரிழந்தார். அவரது வீட்டுக்கு திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி நேரில் சென்று உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
இதேபோல் மேலும் 3 பெண்களின் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவியை வழங்கினார்.
பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரொட்டி, பழங்களை வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் தாசில்தார் சம்பத், டாக்டர்கள் செந்தில், அம்பிகா, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் காயத்திரி பிரபாகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.