தக்கலையில் பிஸ்கெட்டில் தலைமுடி இருந்த விவகாரம் பிரபல கம்பெனிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
தக்கலையில் பிஸ்கெட்டில் தலைமுடி இருந்த விவகாரத்தில் பிரபல பிஸ்கெட் கம்பெனிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்:
தக்கலையில் பிஸ்கெட்டில் தலைமுடி இருந்த விவகாரத்தில் பிரபல பிஸ்கெட் கம்பெனிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிஸ்கெட்டில் தலைமுடி
தக்கலை மெயின்ரோடு பகுதியை சோ்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 37). இவர் கடந்த நவம்பர் மாதம் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பிரபல கம்பெனியின் பிஸ்ெகட் பாக்கெட்டை ரூ.10 கொடுத்து வாங்கினார். அதனை வீட்டுக்கு வந்து பிரித்து பார்த்த போது, அதில் மனிதனின் தலைமுடி இருந்தது தெரியவந்தது. இதுபற்றி சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் அந்த கம்பெனியில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதுகுறித்து ஸ்ரீகுமார் குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.25 ஆயிரம் அபராதம்
வழக்கை விசாரித்த கோர்ட்டு பிஸ்கெட் கம்பெனியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், அந்த தொகையை பாதிக்கப்பட்ட ஸ்ரீகுமாருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் பிஸ்கெட் தொகை ரூ.10 மற்றும் வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் ஆகியவற்றையும் வழங்க வேண்டும். இத்தகைய தொகை முழுவதையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.