ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தரமற்ற பொருட்களால் வீடு கட்டிய ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தரமற்ற பொருட்களால் வீடு கட்டிய ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வீடு கட்டுமான பணி

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள குளச்சவிளாகத்தை சேர்ந்தவர் வின்சென்ட். இவர் கச்சக்கோட்டுவிளையில் உள்ள ஒரு ஒப்பந்ததாரரிடம் 1,600 சதுர அடியில் ஒரு வீடு கட்டி தர கேட்டுக் கொண்டார். இதற்காக சுமார் ரூ.16 லட்சத்து 69 ஆயிரத்தை ஒப்பந்ததாரரிடம் வின்சென்ட் கொடுத்தார். தொடர்ந்து வீட்டின் கட்டுமான பணி நடந்தது.

இதற்கிடையே அந்த ஒப்பந்ததாரா் உரிமம் இல்லாதவர் என்றும் தரமில்லாத பொருட்களால் வீடு கட்டியதும் தெரியவந்தது. ஒரு கட்டிட கலை நிபுணரைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை பெற்றபோது ஒப்பந்ததாரர் கூடுதலாக ரூ.3 லட்சத்து 99 ஆயிரம் பெற்றது தெரிய வந்துள்ளது.

ரூ.25 ஆயிரம் அபராதம்

இதனால் வின்சென்ட் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பணத்தை திருப்பி கேட்டார். ஆனால், அவர் கொடுக்கவில்ைல. இதையடுத்து வின்சென்ட் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வின்சென்ட் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் ஒப்பந்ததாரரின் சேவை குறைப்பாட்டை சுட்டிக் காட்டி ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் அபராத தொகை, வின்சென்ட்டிடம் அதிகமாக பெற்ற ரூ.3 லட்சத்து 99 ஆயிரம், மற்றும் வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story