25 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த ஆண்டில் 25 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தெரிவித்தார்.
கலந்தாய்வு கூட்டம்
வேலூர் சரக காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம் காட்பாடி சன்பீம் பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தலைமை தாங்கினார். வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வரவேற்றார். இந்த கூட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 349 பள்ளிகள், 34 கல்லூரிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ -மாணவிகள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
கூடுதல் டி.ஜி.பி.சங்கர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
உறுதியாக இருக்க வேண்டும்
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் கூறி வருகிறார். அதை செயலாக்க மாணவ, மாணவிகளும், போலீசாரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். போதைப் பொருள் சமூகத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகக் கூடாது. ஒரு பொருளின் தேவை குறைந்தால் மட்டுமே அதனுடைய வினியோகம் கட்டுப்படுத்தப்படும். எனவே போதைப் பொருளை தொடமாட்டேன் என நாம் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு போலீஸ் சார்பில் இதுவரை 4 கட்டமாக கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்ட சோதனையின் போதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் 25 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனை செய்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் போதைப் பொருளுக்கு எதிரான குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழுவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் போலீசார் ஒருவர் இருக்க வேண்டும். தங்கள் பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு அருகாமையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு போதைப் பொருளுக்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மற்றும் போலீசார் எடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையத்தை சேர்ந்த தீபா சத்தியன், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி ஆகியோர் பேசினர்.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், சன்பீம் பள்ளி தலைவர் ஹரி கோபாலன், ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி நிறுவனர் சரவணன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனி, திருநாவுக்கரசு காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நன்றி கூறினார்.
பின்னர் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரோந்து பணி தீவிரம்
தமிழக மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சோதனை சாவடியில் துப்பறியும் நாய் மற்றும் ஸ்கேனர் கருவி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுவது சிறப்பாக உள்ளது. முன்னாள் ரவுடிகளை போலீசார் கண்காணிப்பார்கள். தேவை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுகின்றனர். போலீசாரின் முக்கிய குறிக்கோளாக ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவது, கொலை, கொள்ளைகளை தடுப்பது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்வது ஆகியவை உள்ளது. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் வரவேற்பாளர் ஒருவர் இருப்பார். அவர் அங்குள்ள லேப்டாப்பில் மனுவின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும். சமீபத்தில் மதுரையில் 2 ஆயிரம் கிலோ கஞ்சா ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்துபவர்களை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். சனிக்கிழமைகளில் போலீசார் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அமாவாசை நாட்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.