முதியவரிடம் ரூ.15 கூடுதல் கட்டணம் வசூலித்த அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


முதியவரிடம் ரூ.15 கூடுதல் கட்டணம் வசூலித்த அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x

முதியவரிடம் ரூ.15 கூடுதல் கட்டணம் வசூலித்ததால் அரசு போக்குவரத்து கழக சோழவந்தான் கிளைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தேனி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

தேனி

முதியவரிடம் ரூ.15 கூடுதல் கட்டணம் வசூலித்ததால் அரசு போக்குவரத்து கழக சோழவந்தான் கிளைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தேனி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

கூடுதல் கட்டணம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் பிரேம்சுதாகர் (வயது 60). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி மதுரையில் இருந்து பெரியகுளத்துக்கு அரசு பஸ்சில் வந்தார். அந்த பஸ் சோழவந்தானில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமானது.

அதில் பிரேம் சுதாகர் பெரியகுளத்துக்கு டிக்கெட் கட்டணம் குறித்து கேட்டார். அதற்கு பஸ் கண்டக்டர் ரூ.65 கட்டணம் என்றார். அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.50 தானே, ஏன் கூடுதலாக கேட்கிறீர்கள் என்று கண்டக்டரிடம் அவர் கேட்டார். அப்போது இது எக்ஸ்பிரஸ் வண்டி என்பதால் கூடுதல் கட்டணம் என்று கண்டக்டர் கூறினார். இதனால், அவர் ரூ.65 கொடுத்து டிக்கெட் எடுத்தார்.

ஆனால், அந்த பஸ் வழக்கம்போல் அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் நின்று சென்றது. அனைத்து பஸ்களும் மதுரையில் இருந்து சுமார் 2 மணி நேரத்தில் பெரியகுளத்துக்கு வந்தடைவது போல், எக்ஸ்பிரஸ் என்று சொல்லப்பட்ட அந்த பஸ்சும் பெரியகுளம் வந்தடைய 2 மணி நேரம் ஆனது.

அபராதம்

இதனால், தன்னிடம் கூடுதலாக வசூல் செய்த பணத்தை திரும்ப வழங்கக்கோரியும், தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் தொடர்பாகவும் தேனி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் பிரேம் சுதாகர் வழக்கு தொடர்ந்தார். அவர் தரப்பில் வக்கீல் திருமலை வெங்கடேசன் ஆஜரானார்.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர், உறுப்பினர்கள் ஹசீனா, ரவி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், மனுதாரர் பிரேம் சுதாகருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சோழவந்தான் கிளை கூடுதலாக வசூலித்த ரூ.15-ஐ திருப்பிக்கொடுக்க வேண்டும். சேவை குறைபாட்டுக்கு ரூ.10 ஆயிரம், மனஉளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.


Next Story