திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்; அமர்குஷ்வாஹா தகவல்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் 46 வகையிலான 25 ஆயிரம் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா விதைகளை விதைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள், முகாம் அலுவலக வளாகத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 15 லட்சம் செடிகள் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வனச்சூழலை பாதுகாத்திட அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மரங்களின் அடர்த்தியை 33 சதவீதமாக உயா்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.