மறு முத்திரையிடாத 25 தராசுகள் பறிமுதல்


மறு முத்திரையிடாத 25 தராசுகள் பறிமுதல்
x

ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் மறு முத்திரையிடாத 25 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே.ஞானவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படியும், சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி மற்றும் வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் புனிதவதி ஆறிவுரையின் படியும், வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தலைமையில் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உதவி ஆய்வாளர்களுடன் மீன், இறைச்சிக்கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது மறு முத்திரையிடாமல் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மின்னணு தராசுகள் 24, விட்ட தராசு 1 என மொத்தம் 25 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 8 நிறுவனங்கள் மீது இணக்க கட்டண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்துச் சந்தைகள், காய்கறி கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், மீன் கடைகள், இறைச்சிக்கடைகள், மார்க்கெட்டுகள், பஸ் நிலையங்கள், தெருவோர வியாபாரம் செய்யும் இடங்களில் இதுபோன்று திடீர் ஆய்வுகள் அவ்வபோது மேற்கொள்ளப்படும்.

எனவே மேற்படி இடங்களில் வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிடவும், மறுமுத்திரை சான்றினை நன்கு தெரியும் படி காட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்துக்குள் மறுமுத்திரையிடாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதமும், முத்திரையிடப்பட்டதற்கான சான்றினை நன்கு தெரியும்படி காட்டி வைக்கப்படாவிட்டால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story