சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
x

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

தஞ்சாவூர்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மேலும் பாலியல் தொல்லை கொடுத்த காதலனுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்

தஞ்சை மாவட்டம் வெட்டிக்காடு அருகே உள்ள சில்லத்தூரை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ஆனந்தராஜ்(வயது 27). இவர், 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். மேலும் அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் ஆனந்ததோப்பு பகுதியை சேர்ந்த பொன்னையன் மகன் பால்ராஜ்(32). இவர் சில்லத்தூருக்கு சிறுமியின் அண்ணனை பார்க்க வந்தபோது சிறுமியின் காதல் விவகாரம் அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரும் சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார்.

சிறுமி கர்ப்பம்

இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து தனது காதலனிடம், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறும் சிறுமி கூறி உள்ளார். அதற்கு அவர் மறுத்ததையடுத்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார். புகாரின் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஜெயா மற்றும் பெண் போலீஸ் திவ்யலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் குழந்தைக்கு யார் தந்தை என டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டதில் பால்ராஜ் தான் குழந்தைக்கு தந்தை என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

25 ஆண்டுகள் சிறை தண்டனை

இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சுந்தர்ராஜன், சிறுமியை கர்ப்பமாக்கிய பால்ராஜூக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.80 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதேபோல் சிறுமியை காதலித்து பாலியல் தொல்லை கொடுத்த ஆனந்தராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதம் கட்ட தவறினால் 2 பேருக்கும் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜரானார்.


Related Tags :
Next Story