250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
பாவூர்சத்திரம் அருகே போலீசார் 250 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்த நாடார்பட்டியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் அருகே நின்ற காரை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததும், அதன் மொத்த மதிப்பு ரூ.1.96 லட்சம் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக இந்த புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் கோவிந்தன் (வயது 33) மற்றும் அவருடன் தொடர்புடைய பாவூர்சத்திரம் வடக்கு கொண்டலூரை சேர்ந்த வேல்முருகன் (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து காருடன் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாவூர்சத்திரம் கல்லூரணி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (28) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.