நெல்லை மாவட்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு


நெல்லை மாவட்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு
x

புத்தாண்டையொட்டி நெல்லை மாவட்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

திருநெல்வேலி

ஆங்கில புத்தாண்டு வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை மாநகர பகுதிகளில் போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின்பேரில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நெல்லை மாநகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மார்க்கெட்டுகள், மருத்துவமனைகள், கோவில்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் கூறுகையில், ''புத்தாண்டையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாதவாறு, நெல்லை மாநகர பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 31-ந்தேதி காலை முதல் 1-ந்தேதி இரவு வரையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். விடிய விடிய வாகன சோதனை நடத்தப்படும். ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்படும். பைக் ரேஸ் செல்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்கள் சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அந்த வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் உடமைகள் மற்றும் பார்சல்களை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். ரெயில்வே போலீசாருடன் ஆயுதப்படை, மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட உள்ளனர்.

மாவட்ட எல்லைகளில் அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகிறது. ெநல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், புறநகர் பகுதிகளில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வள்ளியூர், நாங்குநேரி, திசையன்விளை, மானூர், அம்பை, வீரவநல்லூர், சேரன்மாதேவி, ராதாபுரம், பணகுடி, களக்காடு, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகன சோதனை நடத்துகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ ஆராய்ச்சி மையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story