2,597 மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை - சபாநாயகர் வழங்கினார்
நெல்லையில் 2,597 மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகையை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா நடந்தது.
சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, 2,597 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் வங்கி பரிவர்த்தனை அட்டை மற்றும் விழிப்புணர்வு கையேடு அடங்கிய பெட்டகம் ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் என்ஜினீயரிங் பயிலும் 339 மாணவிகள், மருத்துவம் படிக்கும் 138 மாணவிகள், வேளாண்மை பயிலும் 9 பேர், கால்நடை மருத்துவம் படிக்கும் 6 பேர், சட்டம் படிக்கும் 27 பேர், கலை மற்றும் அறிவியல் பயிலும் 2,050 மாணவிகள், தொழில்கல்வி பயிலும் 28 மாணவிகள் என மொத்தம் 2,597 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2022-2023-ம் கல்வி ஆண்டில் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த பிறகு இணையதளம் மூலமாக இந்த திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமன் டேவிட், ஒன் ஸ்டாப் சென்டர் அலுவலர் பொன்முத்து, கல்லூரி முதல்வர் உஷா காட்வின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வடக்கன்குளம் நடுதெரு, மரியசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.43 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை அமைத்தல், குடிநீர் வசதி அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.