உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 26 ஊழியர்கள் பணி நீக்கம்
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 26 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 126 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 52 பேர் கட்டண வசூல் மையத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 26 ஊழியர்களை சுங்கச்சாவடி நிறுவனம் நேற்றுடன் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி பணி நீக்கம் செய்துள்ளது. இதனிடையே நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்தவர்களை பணி செய்ய அனுமதிக்கவில்லை. 26 ஊழியர்களுக்கு ஆதரவாக வசூல் மையங்களை பூட்டிவிட்டு மற்ற ஊழியர்களும் சுங்கச்சாவடி அலுவலகத்தின் எதிரே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் இதுபோன்ற ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 26 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினர்.
இதற்கிடையே இந்த போராட்டத்தால் அனைத்து வாகனங்களும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சென்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு, தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சுமுக முடிவு ஏற்படாததால் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.