மதுரை அருகே அண்ணன்-தம்பி வீடுகளில் 26 பவுன் நகை-ரூ.6½ லட்சம் கொள்ளை
மதுரை அருகே அண்ணன்-தம்பி வீடுகளில் 26 பவுன் நகை-ரூ.6½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை அருகே அண்ணன்-தம்பி வீடுகளில் 26 பவுன் நகை-ரூ.6½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நகை-பணம்
மதுரை அடுத்த சிலைமான் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பூந்தோட்ட நகர் சந்திரலேகா நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 43). இவரும், இவரது சகோதரரும் அடுத்தடுத்து வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் இரவு வீட்டை பூட்டி விட்டு தூங்கி விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது அவர்கள் இருவர் வீட்டில் இருந்து பீரோக்கள் திறந்து கிடந்தன. மேலும் அதில் தர்மராஜ் வீட்டில் 16½ பவுன் நகையும், 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், அவரது சகோதரர் வீட்டில் 9½ பவுன் நகையும், 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் சிலைமான் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்த வீட்டில் 26 பவுன் நகைகள், 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
மதுரை அருகே கல்மேடு பசும்பொன் நகரை சேர்ந்தவர் நிர்மலா தேவி (42). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தார்.
பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.மேலும் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகள், 5 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.