மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 261 வழக்குகளுக்கு தீர்வு
தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 261 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.இதில் ரூ.5¾ கோடிக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 261 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.இதில் ரூ.5¾ கோடிக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
சிறப்பு மக்கள் நீதிமன்றம்
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும், தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையில் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வுகாணும் வகையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகளுக்கு 2-வது மாவட்ட கூடுதல் நீதிபதி மலர்விழி, மாஜிஸ்திரேட்டு இளவரசி, வக்கீல் வித்யா ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் தீர்வு காணப்பட்டது. மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு முதன்மை சார்பு நீதிபதி நாகராஜன், மாஜிஸ்திரேட்டு முருகேசன், வக்கீல் தம்பிதுரை ஆகியோர் கொண்ட 2-வது அமர்வில் தீர்வு காணப்பட்டது.
ரூ.5¾ கோடிக்கு இழப்பீடு
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அமர்வுகளோடு. கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு. பாபநாசம் மற்றும் திருவையாறு ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகள் உட்பட மொத்தம் 2 ஆயிரத்து 13 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 261 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.5 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரத்து 781-க்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது.
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தஞ்சைமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.