காணாமல் போன 265 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - சித்திரை திருவிழாவில் டிரோன் மேப் மூலம் கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு -போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் பேட்டி


காணாமல் போன 265 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - சித்திரை திருவிழாவில் டிரோன் மேப் மூலம் கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு -போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் பேட்டி
x

மதுரையில் காணாமல் போன 265 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சித்திரை திருவிழாவில் டிரோன் மேப் மூலம் கூட்டத்தை கண்காணிக்க உள்ளோம் என போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் கூறினார்.

மதுரை


மதுரையில் காணாமல் போன 265 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சித்திரை திருவிழாவில் டிரோன் மேப் மூலம் கூட்டத்தை கண்காணிக்க உள்ளோம் என போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் கூறினார்.

265 செல்போன்கள் ஒப்படைப்பு

மதுரை நகரில் உள்ள போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டார். அதன்படி செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் கோவில் சரகத்தில்-13, தெற்குவாசல்-6, திருப்பரங்குன்றம்-4, அவனியாபுரம்-9, திடீர்நகர்-42, தல்லாகுளம்-106 உள்ளிட்ட மொத்தம் 265 செல்போன்கள் மீட்கப்பட்டது.

அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. அதில் போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கலந்து கொண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் அரவிந்த், சாய்பிரனீத், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சித்திரை திருவிழாவில் கூடுதல் போலீசார்

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் நிருபர்களிடம் கூறியதாவது:- மதுரை நகரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன ரூ.27 லட்சம் மதிப்புள்ள 265 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 90 சதவீதம் செல்போன்கள் காணாமல் போனதும், 10 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் ஆகும். மதுரையில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. கடந்தாண்டு உள்ள குறைகளை போக்கி இந்தாண்டு சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பை 3 பிரிவாக பிரித்துள்ளோம். சுவாமி சுற்றி வருவது ஒரு பிரிவும், திருக்கல்யாணம், தேரோட்டம் 2-வது பிரிவும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் 3-வது பிரிவாக பிரித்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளோம்.

கடந்தாண்டு 3,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தாண்டு அதன் எண்ணிக்கையை உயர்த்தி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். அதுகுறித்து அதிகாரிகள் கூட்டம் நடக்க உள்ளது. மேலும் பக்தர்கள் கூட்டமாக இருக்கும் இடங்களை அதிகமான டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க உள்ளோம்.

டிரோனில் ஒலிபெருக்கி

டிரோனில் ஒலிபெருக்கி அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய முயற்சியை எடுக்க உள்ளோம். அது தவிர டிரோன் கேமராவில் மேப் மூலம் எந்த இடத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது என்பதை கண்காணித்து கூட்டத்தை கட்டுப்படுத்த உள்ளோம். மேலும் பொதுமக்களுக்கு உதவும் வண்ணம் போலீசார் உங்கள் நண்பன் என்று அரங்கு அமைத்து உதவ உள்ளோம்.

நகரில் மொத்தம் 1,500 இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா முழுவதையும் ஆய்வு செய்து வருகிறோம். அதில் எது பழுதாக உள்ளது என்பதை கண்காணித்து அதை சரி செய்துள்ளோம். 30 சதவீதம் கேமராக்கள் குறைபாட்டுடன் இருந்தது. தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story