271 கற்போர் எழுத்தறிவு மையங்கள் தொடக்கம்


271 கற்போர் எழுத்தறிவு மையங்கள் தொடக்கம்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் 271 கற்போர் எழுத்தறிவு மையங்கள் தொடக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் "புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 142 கற்போர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள எழுத படிக்க தெரியாத கற்போர்களுக்கு கல்வி தன்னார்வலர்களை கொண்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளி வளாகம், பணிபுரியும் இடங்களில் கற்போர் மையங்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத படிக்க பயிற்சி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக பெரம்பலூர் ஒன்றியத்தில் 64-ம், வேப்பந்தட்டை 76-ம், வேப்பூர் 69-ம், ஆலத்தூர் ஒன்றியத்தில் 62-ம் என மொத்தம் 271 கற்போர் எழுத்தறிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆலத்தூர் தாலுகா, இரூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கற்போர் எழுத்தறிவு மையத்தினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, கற்போர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கி பேசினார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், மகாதேவன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் வஹிதாபானு ஆகியோர் திட்டத்தின் நோக்கத்தினை விளக்கி பேசினர்


Next Story