தொழில் அதிபரிடம் ரூ.27.70 லட்சம் மோசடி
நாகர்கோவிலில் தொழில் அதிபரிடம் ரூ.27.70 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் தொழில் அதிபரிடம் ரூ.27.70 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழில் அதிபர்
நாகர்கோவில் பார்வதிபுரம் கே.பி. ரோட்டை சேர்ந்தவர் ஆன்டனி புருஷ் (வயது 39). இவர் நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நான் கட்டிடம் கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறேன்.
வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (58), அவருடைய மனைவி வாணி மற்றும் 3 மகன்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் என்னிடம் குடும்ப உறுப்பினர்கள் போல பழகினர். நாகராஜன் தண்ணீர் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
ரூ.27.70 லட்சம் மோசடி
இந்தநிலையில் தொழிலை விரிவு படுத்துவதற்காக என்னிடம் பணம் கேட்டார். நானும் 2 தவணையாக ரூ.27 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்தேன். அந்த பணத்தை நாகராஜன், அவரது மனைவி வாணி மற்றும் 3 மகன்கள் வாங்கினர். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர்கள் கொடுக்க மறுத்தனர். பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் மனுவை விசாரித்த கோர்ட்டு இதுதொடர்பாக விசாரணை நடத்த வடசேரி போலீசுக்கு உத்தரவிட்டது. அதன்படி நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.