128 கிலோ கஞ்சா பறிமுதல்


128 கிலோ கஞ்சா பறிமுதல்
x

ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு கடத்தி வரப்பட்ட 128 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்த கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன், ஏட்டு இளையராஜா, போலீஸ்காரர்கள் சுந்தர்ராமன், ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.


லாரியில் 128 கிலோ கஞ்சா

அதன்படி தனிப்படை போலீசார், தஞ்சை ரெயில்வே குட்ஷெட் எடை மேடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு 2 லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரியில் சிலர் ஏதோ பொட்டலங்களை இடமாற்றம் செய்ததை போலீசார் பார்த்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக அங்கு சென்றனர்.

போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து 2 பேர் தப்பி ஓடி விட்டனர். 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார், அந்த லாரிகளை சோதனை செய்தபோது அதில் 128 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து அந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆந்திராவில் இருந்து கடத்தல்

விசாரணையில் அவர்கள் தஞ்சை மாவட்டம் திருபுவனம் கீழ சாலையை சேர்ந்த அசாருதீன்(வயது 19), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ஆசிப்ராஜா(25), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கா சமுத்திரத்தை சேர்ந்த சதாம் உசேன்(30), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழபுதூரை சேர்ந்த சஞ்சய்(41), ஈரோடு புதுகொத்தைகாட்டை சேர்ந்த மாணிக்கராஜ்(37) ஆகிய 5 பேர் என்பது தெரிய வந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக லாரியில் 128 கிலோ கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்க முயன்றதும், தஞ்சையில் வைத்து ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு கஞ்சா பொட்டலங்களை இடமாற்றம் செய்யும்போது சிக்கியதும் தெரிய வந்தது.

5 பேர் கைது; 2 லாரி பறிமுதல்

இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா பொட்டலங்கள், லாரிகள் மற்றும் பிடிபட்ட 5 பேரையும் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து 5 பேரையும் கைது செய்தனர். 2 லாரிகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள். கஞ்சா கடத்தி வந்த கும்பலை பிடித்த தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி. கயல்விழி பாராட்டினார்.



Next Story