காந்தி ஜெயந்தியன்று குமரியில் மது விற்ற 28 பேர் கைது
காந்தி ஜெயந்தியன்று குமரியில் மது விற்ற 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
காந்தி ஜெயந்தி அன்று குமரி மாவட்டத்தில் மது விற்ற 28 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,219 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மது விற்பனை
நாடு முழுவதும் நேற்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. எனினும் குமரி மாவட்டத்தில் முந்தைய நாளே டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக மதுவிற்பனை நடந்தது. எனவே இதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருட்டுத்தனமாக மது விற்றவர்களை கைது செய்தனர். அந்த வகையில் வடசேரி நாடான்குளம் பகுதியில் மதுவிற்ற இயேசு பாலன் என்பவரை வடசேரி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 58 பாட்டில்கள் மற்றும் மதுவிற்ற பணம் ரூ.2,800 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
28 பேர் கைது
மேலும் ஆசாரிபள்ளம் கோட்டவிளை பகுதியில் மது விற்ற மைக்கேல் ஜாக்சன் என்பவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களும், பூதப்பாண்டி மத்தியாஸ்நகர் பகுதியில் மது விற்ற எட்மண்ட் என்பவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களும், துவரங்காடு பகுதியில் மது விற்ற வேலாயுதம், செல்வசிங் ஆகியோரிடம் இருந்து 150 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல மாவட்டம் முழுவதும் மது விற்பனையில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1,219 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்ற பணம் ரூ.24 ஆயிரத்து 590 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
---