திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 154 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 28 ஆயிரத்து 154 மாணவ, மாணவிகள் எழுதினர். 2 ஆயிரத்து 273 பேர் தேர்வு எழுத வராமல் ‘ஆப்சென்ட்’ ஆனார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 28 ஆயிரத்து 154 மாணவ, மாணவிகள் எழுதினர். 2 ஆயிரத்து 273 பேர் தேர்வு எழுத வராமல் 'ஆப்சென்ட்' ஆனார்கள்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்விற்காக செய்யாறு கல்வி மாவட்டத்தில் 51 தேர்வு மையங்களும், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 69 தேர்வு மையங்களும் என மொத்தம் 120 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் தனித்தேர்வர்களுக்கு 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 427 பள்ளி மாணவ, மாணவிகளில் 28 ஆயிரத்து 154 பேர் தேர்வு எழுதினர்.
2,273 பேர் தேர்வு எழுதவில்லை
இதில் 2273 பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் 127 முதன்மை கண்காணிப்பாளர்கள், 140 துறை அலுவலர்கள், 138 பறக்கும் படையினர், 1,875 அறை கண்காணிப்பாளர்கள், 485 சொல்வதை எழுதுபவர்கள், 31 வழித்தட அலுவலர்கள், 5 தொடர்பு அலுவலர்கள், 10 மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், 125 எழுத்தர்கள் மற்றும் 125 அலுவலக உதவியாளர் என மொத்தம் 3 ஆயிரத்து 61 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லாத மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பஸ் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரைத்தளத்திலேயே தேர்வெழுத போதிய அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 தேர்வை மாவட்ட கலெக்டர் முருகேஷ் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிறப்பு வழிபாடு
முன்னதாக திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் மாணவிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து திலகமிட்டு தேர்விற்கு அனுப்பி வைத்தனர்.