198 பயனாளிகளுக்கு ரூ.29¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
198 பயனாளிகளுக்கு ரூ.29¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கி பேசினார். இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 122 மனுக்கள் பெறப்பட்டு, 81 மனுக்கள் ஏற்கப்பட்டும், 41 மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. நேற்று 91 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. மேலும் இம்முகாமில் பொதுமக்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியத்திற்கான ஆணைகளையும், 2 பேருக்கு ரூ.16,000 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைகளும், 4 பேருக்கு ரூ.90,000 மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகைகளும், 7 பேருக்கு ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் காலிமனை பட்டா மற்றும் நத்தம் மனைப்பட்டாக்களுக்கான ஆணைகளும், வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பில் 5 பேருக்கு ரூ.21,660 மதிப்பீட்டில் இடுபொருட்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 12 பேருக்கு ரூ.1,10,500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 141 பயனாளிகளுக்கு ரூ.21.52 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலைகளும், கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் 4 பேருக்கு ரூ.80,000 மதிப்பீட்டில் புல்வெட்டும் கருவிகளையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 5 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 3 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 2 பேருக்கு மருந்து பெட்டகங்களும், மகளிர் திட்டம் சார்பில் 3 பேருக்கு ரூ.60,000 மதிப்பீட்டில் உதவித்தொகைக்கான காசோலைகளும் என பல்வேறு துறைகளின் சார்பில் 198 பயனாளிகளுக்கு ரூ.29,30,160 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஈஸ்வரன், மகளிர் திட்ட அலுவலர் முருகண்ணன், கோட்டாட்சியர் பரிமளம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தீபாசங்கரி, தாசில்தார் பாக்கியம்விக்டோரியா, ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.