குமரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு விபத்தில் 292 பேர் பலி


குமரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு விபத்தில் 292 பேர் பலி
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 8:52 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு, நடந்த சாலை விபத்துகளில் 292 பேர் பலியானார்கள். இது 2021-ம் ஆண்டை விட குறைவாகும்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு, நடந்த சாலை விபத்துகளில் 292 பேர் பலியானார்கள். இது 2021-ம் ஆண்டை விட குறைவாகும்.

சாலை விபத்தில் 292 பேர் பலி

குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் 2022-ம் ஆண்டு 1,030 விபத்துகள் நடந்தது. இதில் 292 பேர் பலியானார்கள். 1,462 பேர் படுகாயம் அடைந்தனர். 2021-ம் ஆண்டு நடந்த விபத்துகளில் 307 பேர் பலியானார்கள். இதன் மூலம் 2022-ம் ஆண்டு பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

ஹெல்மெட் அணியாமல் சாலை விதியை மீறி பயணம் செய்ததாக 2 லட்சத்து 17 ஆயிரத்து 307 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

கஞ்சா வழக்கு

மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு மது மற்றும் குட்கா விற்பனை ஆகியவற்றை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இதன்மூலம் 206 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 345 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் 172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 142 பேரின் வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர்.

357 திருட்டு வழக்குகள்

மேலும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அதன்படி 2022-ம் ஆண்டு 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் நடந்த திருட்டுகள் தொடர்பாக 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 352 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ரூ.2 கோடியே 54 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதே போல் மாயமான 722 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.86 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

கனரக வாகனங்களில் அதிகபாரம் ஏற்றி வந்ததாக 1,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 27 லட்சத்து 42 ஆயிரத்து 696 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story