தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.725 கோடி செலவில் 29,551 பணிகள் - கலெக்டர் சங்கீதா தகவல்


தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.725 கோடி செலவில் 29,551 பணிகள் - கலெக்டர் சங்கீதா தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2023 1:24 AM IST (Updated: 2 Jun 2023 4:25 PM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.725 கோடி செலவில் 29 ஆயிரத்து 551 பணிகள் நடப்பதாக கலெக்டர் சங்கீதா கூறினார்.

மதுரை


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.725 கோடி செலவில் 29 ஆயிரத்து 551 பணிகள் நடப்பதாக கலெக்டர் சங்கீதா கூறினார்.

ஊரக வளர்ச்சி

மதுரை மாவட்டம், மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும். ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஊரக பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது போன்றவையே அரசின் அடிப்படை நோக்கமாகும். குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பாக வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

முன்மாதிரி கிராமம்

குறிப்பாக ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ.31 கோடியே 42 லட்சம் செலவில் 1,252 பணிகளும், மாநில நிதிக்குழு மானியம் (மாவட்ட ஊராட்சி) திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 99 லட்சம் செலவில் 36 பணிகளும் நடக்கின்றன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 86 லட்சம் செலவில் 129 பணிகளும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியே 58 லட்சம் செலவில் 36 பணிகளும், 15-வது மத்திய நிதிக்குழு மானிய (கிராம, வட்டார, மாவட்ட ஊராட்சி) திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நிதி ரூ.157 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 500 பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.724 கோடியே 95 லட்சம் செலவில் 29 ஆயிரத்து 551 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) கழிப்பறை திட்டத்தின் கீழ் ரூ.13.48 கோடி மதிப்பீட்டில் 2,280 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) முன்மாதிரி கிராம திட்டத்தின்கீழ் ரூ.13 கோடியே 48 லட்சம் செலவில் 4 ஆயிரத்து 595 பணிகளும் நடக்கின்றன.

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.63 கோடியே 22 லட்சம் செலவில் 2 ஆயிரத்து 280 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.70 கோடியே 45 லட்சம் செலவில் 1,214 பணிகளும், ஆதி திராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 73 லட்சம் செலவில் 70 பணிகளும், தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 57 லட்சம் செலவில் 42 பணிகளும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 49 லட்சம் செலவில் 2 பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.725 கோடி செலவில் 29 ஆயிரத்து 551 பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன் உடன் இருந்தார்.


Next Story