2-வது நாளாக அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்


2-வது நாளாக  அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்
x

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் 2-வது நாளாக இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் 2-வது நாளாக இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.

ஆள் சேர்ப்பு முகாம்

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. இந்த திட்டத்தில் சேர கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இருந்து 36 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்தனர்.

முதல் நாளில் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 95 சதவீதம் பேர் வந்திருந்தார்கள். நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய முகாம் நேற்று காலை 5.30 மணி வரை நடைபெற்றது.

கலெக்டர் ஆலோசனை

அதைத்தொடா்ந்து மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன் உள்பட அரசு அதிகாரிகள் அண்ணா விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்தனர். அப்போது ராணுவ அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

2-வது நாளான நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது. இதில் 17 மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதனால் முகாம் நடைபெறும் வடசேரி பகுதி முழுவதும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதியது.

முகாமில் பங்கேற்பதற்காக வந்த இளைஞர்கள் அனைவரும் வடசேரி பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் அமரவைக்கப்பட்டனர். பின்னர் அந்த கூடாரத்தில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் வரை இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது இளைஞர்கள் கையில் அழைப்பு கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் வந்திருந்ததை காணமுடிந்தது. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து இளைஞர்களின் சான்றிதழ்கள் மற்றும் அழைப்பு கடிதம் ஆகியவற்றை ராணுவ அதிகாரிகள் சரிபார்த்தனர்.

உடல் தகுதி தேர்வு

அதைத்தொடர்ந்து இளைஞர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது. பின்னர் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் இளைஞர்கள் 1,600 மீட்டர் தூரம் ஓடினர். முகாமானது தொடர்ந்து வருகிற 1- ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 200 ராணுவ வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story