2-வது நாளாக தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை


2-வது நாளாக தங்கும் விடுதிகளில்   போலீசார் சோதனை
x

மங்களூரு சம்பவம் எதிரொலியாக 2-வது நாளாக தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

வேலூர்

மங்களூரு சம்பவம் எதிரொலியாக 2-வது நாளாக தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

வாகன தணிக்கை

கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் ஒன்று நேற்று முன்தினம் வெடித்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது பயங்கரவாதிகளின் சதித்திட்டமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் வாகன தணிக்கை, ரோந்து மற்றும் தங்கும் விடுதிகளை சோதனையிடும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

2-வது நாளாக சோதனை

அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன தணிக்கை மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளாக வேலூர் மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து சந்திப்புகள், மாநில, மாவட்ட எல்லைப்பகுதிகள், விடுதிகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை வாகன தணிக்கை மற்றும் விடுதிகளில் சோதனை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். மேலும் தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படி மர்ம நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா என்று சோதனையிட்டனர். இந்த சோதனை ஓரிரு நாட்கள் தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story