2-வது நாளாக சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
2-வது நாளாக ஆய்வு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழிக்குழுவின் தலைவர் உதயசூரியன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் சேலத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக சட்டப்பேரவை உறுதிமொழிக்குழுவினர் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சேலம் அருகே கொண்டப்பநாயக்கன்பட்டியில் ரூ.6 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை உறுதிமொழி குழுவின் தலைவர் உதயசூரியன் தலைமையில் குழு உறுப்பினர்கள் அர்ஜூனன், சின்னப்பா, செல்வராஜ், தங்கப்பாண்டியன், தேவராஜி, மகாராஜன், ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஐஸ்கிரீம் தொழிற்சாலை
பின்னர் அவர்கள், சேலம் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12 கோடியே 26 லட்சத்தில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட அதிநவீன புதிய தொழிற்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ஆவின் பால் பண்ணையில் ரூ.140.14 கோடியில் பால் கையாளும் திறன் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் லிட்டரில் இருந்து 7 லட்சம் லிட்டராக உயர்த்தி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியையும், தினமும் 30 டன் பால்பொடி தயாரிக்கும் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணியும் உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும், அவர்கள் பால் பண்ணையில் வெண்ணெய், நெய், பால் பவுடர் மற்றும் பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி சார்பில் நெத்திமேடு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நேரு நகரில் ரூ.37 ேகாடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 392 குடியிருப்புகளுடன் புதியதாக கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலாளர் சீனிவாசன், துணை மேயர் சாரதாதேவி, ஆவின் பொது மேலாளர், விஜய்பாபு, சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.