நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கிய வாலிபரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
வால்பாறைக்கு காதலியுடன் சுற்றுலா வந்தபோது பிர்லா நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கிய வாலிபரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
வால்பாறை
வால்பாறைக்கு காதலியுடன் சுற்றுலா வந்தபோது பிர்லா நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கிய வாலிபரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
காதலியுடன் சுற்றுலா
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சாஹர் (வயது 21). பிளம்பர். இவர் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் இருகூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர்.
பின்னர் வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சி பகுதியில் நின்று இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தனர். மேலும் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
நீர்வீழ்ச்சியில் மூழ்கினார்
அப்போது சாஹர் திடீரென நிலை தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் காதலி அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தண்ணீரில் விழுந்தார். இதில் 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
கல்லூரி மாணவி அங்கிருந்த பாறையை பிடித்து உயிர்தப்பி மேலே வந்தார். ஆனால் தடாகத்தில் இருந்த சுழலில் சிக்கி சாஹர் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தண்ணீர் மூழ்கிய சாஹரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு நேரம் ஆனதால் போதிய வெளிச்சம் இல்லாமல் தேடும் பணி கைவிடப்பட்டது.
2-வது நாளாக தேடும் பணி
இதனைத்தொடர்ந்து நேற்று காலை 2-வது நாளாக தீயணைப்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அவருடன் இணைந்து தண்ணீர் மூழ்கியவர்களை மீட்கும் சண்முகம் என்பவரும் தேடும் பணியில் ஈடுபட்டார். மாலை வரை தேடியும் வாலிபரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.