போலீஸ்காரர் வீட்டு முன்பு நர்சு தர்ணா
ஆம்பூர் அருகே போலீஸ்காரர் வீட்டு முன்பு நர்சு தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
காதல் திருமணம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கீழ்முருங்கை பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 26). இவர் சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ரம்யா (25) என்பவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
அதன்பின் ரம்யாவுக்கு தெரியாமல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த வனிதா என்ற பெண்ணுடன் ஜெய்கணேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி வனிதாவும் ஜெய்கணேசும் ரம்யாவுக்கு தெரியாமல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ரம்யா ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் வனிதாவை கீழ்முருங்கை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு ஜெய்கணேஷ் நேற்று முன்தினம் அழைத்து வந்துள்ளார்.
தர்ணா போராட்டம்
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரம்யா நீதி கேட்டுஜெய்கணேஷ் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் ரம்யாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.