கடலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்டத்துக்கான 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக நடைபெறும் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் எனவும், இத்திட்டம் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. மேலும் ரூ.1000 பெற தகுதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.
அதன்படி இத்திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,416 ரேஷன் கடைகளிலும் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம் நடக்கிறது. இதில் முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் மொத்தம் 3½ லட்சம் பெண்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
இதையடுத்து 2-ம் கட்ட முகாமுக்காக கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வீடு, வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. அந்த டோக்கனில் எந்த நாள், எந்த நேரம் விண்ணப்பத்தை பதிவு செய்ய வர வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் 14 ஒன்றியங்களில் உள்ள 557 ரேஷன் கடை பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடலூர் குண்டுஉப்பலவாடி குழந்தைகள் மையம், பெரிய கங்கணாங்குப்பம் துணை சுகாதார நிலையம், நாணமேடு நேரு இளைஞர் நற்பணி மன்ற அலுவலகம், காரைக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு, விண்ணப்ப பதிவு மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தார். 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.