திருமலையை போன்று 3 ஆண்டுகளில் திருவண்ணாமலையை மாற்ற நடவடிக்கை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தகவல்


திருமலையை போன்று 3 ஆண்டுகளில் திருவண்ணாமலையை மாற்ற நடவடிக்கை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தகவல்
x

Steps taken to transform Tiruvannamalai like Tirumalai in 3 years Ministers AV Velu, Shekhar Babu Information

திருவண்ணாமலை

3 ஆண்டுகளில் திருமலை போன்று திருவண்ணாமலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மகா தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன் ஜோதி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசியதாவது:-

தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலை நகர வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவிழா அன்று வியாபாரிகள் கடைகள் முன்பு தேவையில்லாமல் வாகனங்களை நிறுத்த வேண்டாம். குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும் இதற்கு வியாபாரிகள் தரப்பிலும் முழு ஒத்துழைப்பு இருக்க வேண்டும். கோவில் உள்ளே வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் எந்தவித இடையூறுகள் இன்றியும் உள்ளே செல்லவும், அமர வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

100 மருத்துவ குழுக்கள்

கோவில் உபயதாரர்கள் உள்ளே வரும்போது நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதை காவல்துறையினர் முறைப்படுத்த வேண்டும். தீபத்திருவிழாவன்று திருவண்ணாமலைக்கு சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தர உள்ளதால் மருத்துவக் குழுக்கள் போதுமானதாக இருக்காது. எனவே 100 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், போலீசார் தங்களுக்கு வேண்டிய நபர்களை கோவிலுக்குள் அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். அனுமதி அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

தேவை இல்லாமல் கோவிலுக்குள் அதிகப்படியான காவலர்களை பணியில் அமர்த்த வேண்டாம். ஒவ்வொரு தேருக்கும் ஒரு சிறப்பு அதிகாரி பணியில் அமர்த்தப்பட வேண்டும். கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

திருவண்ணாமலையை திருமலை போன்று ஆக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இதன் மூலம் மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

திருவண்ணாமலையை திருமலை போன்று மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. தீபத்திருவிழா முடிந்ததும் அதற்கான பணிகள் நடைபெறும்.

திருவண்ணாமலைக்கு பல்வேறு வசதிகள் கொண்டுவர எனது துறை சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். தேர்கள் சரியான முறையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் முன்கூட்டியே பரிசோதனை செய்திருக்க வேண்டும். பராசக்தி அம்மன் தேரின் மேல்பகுதியில் பழுது உள்ளதாக புகார் வந்துள்ளது. அதை மீண்டும் சரி செய்ய வேண்டும்.

தீபத் திருவிழாவின்போது வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், தி.மு.க.நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story