தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து போலீசார் கடந்த 2022-ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய மணக்காடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பால்மாரி (வயது 24) என்பவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
அதேபோல் களக்காடு போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு பொது சொத்தை சேதப்படுத்தியதாக கல்லடி சிதம்பராபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (34) என்பவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் இவருக்கும் கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது.
நெல்லை அருகே கோபாலசமுத்திரத்தை சேர்ந்த கந்தசாமி (48) என்பவரை முன்னீர்பள்ளம் போலீசார் அடிதடி, கொலை முயற்சி வழக்கில் 2021-ம் ஆண்டு கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் தாழையூத்து, களக்காடு மற்றும் போலீசார் தலைமறைவாக இருந்த பால்மாரி, தமிழ்செல்வன், கந்தசாமி ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.