ஆடு திருடிய 3 பேர் கைது
பொங்கலூர் அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 63). இவர் தனது தோட்டத்தில் 70 ஆடுகள் வளர்த்து வருகிறார். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வந்த பின் நேற்று முன்தினம் இரவு பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை தங்கவேலின் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்வதாக தகவல் கிடைத்தது. உடனடியாக விரட்டிச் சென்றபோது பெருந்தொழுவு அருகே இருசக்கர வாகனத்தில் 3 பேர் கடத்தி செல்வதை கண்டுபிடித்து மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆடுகள் திருடிய 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருப்பூர் முதலிபாளையத்தை சேர்ந்த சந்திரன் மகன் கோபிநாத் (19), பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் ஆகாஷ் (19), நாச்சிபாளையத்தைச் சேர்ந்த பாபு மகன் பசித் (19) என்பது தெரியவந்தது. ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.