17 வயது சிறுவனை கடத்தி கயிற்றால் கட்டிப்போட்டு சித்ரவதை
திருப்பூரில் 17 வயது சிறுவனை கடத்திச் சென்று கயிற்றால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்து செல்,பணத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுவன் கடத்தல்
திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள தனது நண்பர் தங்கராஜை பார்த்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வலையங்காடு அருகே உள்ள ஒரு மெடிக்கல் அருகே வந்தபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென சிறுவனை மோட்டார்சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் லட்சுமி தியேட்டர் அருகில் உள்ள ஒரு காலி இடத்திற்கு சிறுவனை அழைத்து சென்ற 3 பேரும் அங்கு அவனை கயிற்றால் கை, கால்களை கட்டிப் போட்டுள்ளனர். மேலும் டயரால் சிறுவனை தாக்கி சித்ரவதை செய்து அவனிடம் இருந்த செல்போனை பறித்ததுடன், கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இதன் பின்னர் சிறுவனை கட்டிப்போட்ட நிலையிலேயே அங்கு விட்டுவிட்டு, அந்த 3 பேரும் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். நள்ளிரவு 2 மணி வரை அதே இடத்தில் தப்பிக்க முடியாமல் சிறுவன் போராடி உள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் அங்கு வந்தபோது, சிறுவன் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு, கட்டை அவிழ்த்து விட்டுள்ளனர். மேலும் சிறுவனிடம் யார்? எந்த பகுதியை சேர்ந்தவன் என்பதை விசாரித்த அவர்கள் சிறுவனை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வீட்டிற்கு சென்ற சிறுவன் பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளான். இதுகுறித்து அந்த சிறுவன் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தான். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கடத்திச் சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.
3 வாலிபர்கள் கைது
இதில் சாமுண்டிபுரத்தை சேர்ந்த சூர்யா (வயது 24), நவீன்குமார் (24), கோகுல் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறுவனை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இந்த நிலையில் அந்த 3 பேரும் காந்திநகரை அடுத்த ஈ.பி.காலனியில் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் சென்று 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
3 பேர் மீதும் கடத்தல், கொலைமிரட்டல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சூர்யா, நவீன்குமார்,கோகுல் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரில் சூர்யா மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வெளியே வந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.