மோகனூர் அருகே தொழிலாளியின் கழுத்தை அறுத்த 3 வாலிபர்கள் கைது
மோகனூர் அருகே தொழிலாளியின் கழுத்தை அறுத்த 3 வாலிபர்கள் கைது
மோகனூர்:
மோகனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட என்.புதுப்பட்டி குரும்பர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 36). தொழிலாளி. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என்.புதுப்பட்டி அரசு மதுக்கடையில் நாமக்கல் ஜெய்நகரை சேர்ந்த கார்த்திக் (26), போதுபட்டி துளசி நகரை சேர்ந்த பிரகாசம் (30), கொசவம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் மதுக்கடைக்கு வருபவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற ஆனந்தன் மற்றும் அவருடைய உறவினர் பழனியாண்டி ஆகியோர் 3 பேரிடமும் ஏன்? இவ்வாறு தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டார்களாம். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதை மனதில் வைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு என்.புதுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்வாரிய அலுவலகம் பகுதியில் ஆனந்தன், பழனியாண்டி வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் மதுக்கடை தகராறை மனதில் வைத்து கையால் அடித்து கீழே தள்ளினர். பின்னர் கார்த்திக் கையில் வைத்திருந்த கத்தியால் ஆனந்தனின் கழுத்தை அறுத்தார். இதனால் வலி தாங்கமுடியாமல் கதறிய அவரை பழனியாண்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், பிரகாசம், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.