காரின் சக்கரத்தில் சிக்கி இறந்த முள்ளம்பன்றியை கடத்திய 3 பேர் கைது


காரின் சக்கரத்தில் சிக்கி இறந்த முள்ளம்பன்றியை கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே காரின் சக்கரத்தில் சிக்கி இறந்த முள்ளம்பன்றியை கடத்தி சென்ற கேரளாவை சேர்ந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே காரின் சக்கரத்தில் சிக்கி இறந்த முள்ளம்பன்றியை கடத்தி சென்ற கேரளாவை சேர்ந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வாகன சோதனை

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனால் வனத்துறையினர் வன குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே ேசாலாடி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் இருந்து நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி வழியாக வைத்திரிக்கு சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர்.

3 பேர் கைது

அப்போது காரில் காட்டு முள்ளம்பன்றியை இறந்த நிலையில் இருப்பதும், அதனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முள்ளம்பன்றி, கார் மற்றும் 3 பேரை பிடித்து சேரம்பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்காரம் உத்தரவின்படி, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வன பாதுகாப்பு குழு வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் ஆனந்த், வன காப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் இறந்த முள்ளம்பன்றியை கடத்திய 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் வயநாடு மாவட்டம் வைத்திரி காக்கா வயல்பகுதியை சேர்ந்த அதுல்குமார் (வயது 26), முனீர் (33), சிராஜூதீன் (46) ஆகியோர் என்பதும், காரில் வந்த வந்த போது எதிர்பாராத விதமாக காரின் சக்கரத்தில் சிக்கி முள்ளம்பன்றி இறந்ததும், அதனை காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் முள்ளம்பன்றி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story