சித்தோட்டில் செல்போன் மூலம் கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது
பவானி அருகே உள்ள சித்தோடு பகுதியில் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை நடப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை பவானி அடுத்த லட்சுமி நகர் மற்றும் கோணவாய்க்கால் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் 3 பேர் வந்தார்கள். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்கள். இதனால் மோட்டார்சைக்கிளை போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 25 ஆயிரம் இருக்கும். போலீசார் உடனே 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் சித்தோடு குறும்பரப்பு பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 28), கொங்கம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (34), சொட்டையம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் (44) என்பதும், இவர்கள் 3 பேரும் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்பவர்களுக்கு அவர்களின் இடம் தேடிச்சென்று கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்கள்.