ஆந்திராவில் இருந்து தேனி வழியாக கருவாடு லாரியில் ரூ.3 கோடி கஞ்சா கடத்தல் 3 பேர் கைது
ஆந்திராவில் இருந்து தேனி வழியாக கருவாடு லாரியில் கடத்தி வந்த ரூ.3 கோடி கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி,
ஆந்திர மாநிலத்தில் இருந்து விழுப்புரம், தேனி வழியாக ராமநாதபுரத்துக்கு லாரியில் கஞ்சா கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அனைத்து பகுதிகளிலும் உஷார்படுத்தப்பட்டனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு, தேனி-மதுரை மாவட்ட எல்லையான திம்மரசநாயக்கனூர் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கருவாடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். லாரிக்குள், ஓலைக்கூடைகளில் கருவாடு இருந்தது. அதன் அடிப்பகுதியில், 10-க்கும் மேற்பட்ட சாக்குமூட்டைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்
ஓலைக்கூடைகளின் கீழ்ப்பகுதியில் சாக்கு மூட்டைகள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து லாரியில் இருந்த கருவாடு கூடைகளை போலீசார் அகற்றினர். அதன் கீழ் பகுதியில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதற்குள் கஞ்சா இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
சாக்கு மூட்டைகளில் இருந்து 1,200 கிலோ கஞ்சா மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி என்று கருதப்படுகிறது. இதற்கிடையே லாரியில் வந்த 3 பேரை கைது செய்து ஆண்டிப்பட்டி போலீஸ்நிலையத்தில் வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.