கேரள வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
கேரள வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆண்டனி ஜோசப் (வயது 23). இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 28-ந் தேதி வந்தார். இதையடுத்து ஏ.டி.சி. பஸ் நிறுத்தத்தில் நண்பருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள், முக்கியமான விஷயம் பேச வேண்டி உள்ளது. எங்களிடம் செல்போன் இல்லை, உங்களது செல்போனை தாருங்கள் என்று ஜோசப்பிடம் கேட்டு உள்ளனர். ஆனால், அவர் செல்போன் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த 3 பேரும் சேர்ந்து ஜோசப்பிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, முள்ளிகொரையை சேர்ந்த ராபின் சின்னப்பா (22), நொண்டிமேடு பகுதியை சேர்ந்த விக்ரம் (20), வண்டிச்சோலையை சேர்ந்த அப்பாஸ் (19) ஆகிய 3 பேர் செல்போன் பறித்தது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.