நாகர்கோவில்-பெங்களூரு ரெயிலில் பெண் என்ஜினீயரிடம் 9 பவுன் நகை திருடிய 3 பேர் கைது


நாகர்கோவில்-பெங்களூரு ரெயிலில் பெண் என்ஜினீயரிடம் 9 பவுன் நகை திருடிய 3 பேர் கைது
x

நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் என்ஜினீயரிடம் 9 பவுன் நகை திருடிய 3 பெண்களை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். 5 மாதத்துக்கு பிறகு அவர்கள் சிக்கினர்.

சேலம்

பெண் என்ஜினீயர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி வள்ளிவினோதினி (வயது 25). என்ஜினீயரான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு ரெயில் வந்தது. பின்னர் தர்மபுரி நோக்கி ரெயில் சென்ற போது, வள்ளி வினோதினி, தனது பையில் வைத்திருந்த நகையை பார்த்தபோது, 9 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. சேலம்-தர்மபுரி இடைப்பட்ட பகுதியில் ரெயில் சென்றபோது மர்ம நபர்கள் அவரது நகையை திருடி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசில் வள்ளிவினோதினி புகார் செய்தார்.

3 பெண்கள் கைது

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில், சேலம், தர்மபுரி ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், திருட்டு போன நேரத்தில் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்களை சேகரித்து, தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள், நகை திருட்டில் ஈடுபட்டிருப்பதும், அவர்கள் புதுக்கோட்டையில் குடும்பத்துடன் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற ரெயில்வே போலீசார், நகை திருட்டில் ஈடுபட்ட ஆண்டி என்பவரின் மனைவி வெண்ணிலா (40), ரஞ்சித் மனைவி சத்யா (23), விக்னேஷ் மனைவி கவிதா (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

9 பவுன் நகை மீட்பு

விசாரணையில் அவர்கள், மதுரையில் இருந்தே வள்ளி வினோதினியை பின் தொடர்ந்து வந்து, அவர் படுக்கையில் தூங்கியபோது, அவரது பையில் இருந்த நகையை திருடி சென்றதாக தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 9 பவுன் நகை மீட்கப்பட்டது. இந்த ரெயில் திருட்டு சம்பவத்தில் 5 மாதத்திற்கு பின்பு துப்பு துலங்கி, 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story