காவலாளிகளை அரிவாளால் தாக்கி ஆடுகளை திருடிய 3 பேர் கைது
செய்துங்கநல்லூர் அருகே தோட்டத்தில் புகுந்து காவலாளிகளை அரிவாளால் தாக்கி ஆடுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் அருகே தோட்டத்தில் புகுந்து காவலாளிகளை அரிவாளால் தாக்கி ஆடுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆடுகள் திருட்டு
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான தோட்டம் தாதன்குளம் காட்டுப்பகுதியில் கல்குவாரிக்கு செல்லும் வழியில் உள்ளது. தோட்டத்தின் காவலாளிகளாக கருங்குளம் மாதாங்கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 54), தாதன்குளம் ஆர்.சி கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மகன் அருணாச்சலம் (47) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 350-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளது. இந்த ஆடுகளை அருணாசலம் மற்றும் பேச்சிமுத்து ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை சுமார் 1 மணி அளவில் தோட்டத்திற்குள் மர்ம கும்பல் நுழைந்தனர். அந்த கும்பல் பேச்சிமுத்து, அருணாசலம் ஆகிய இருவரையும் அரிவாளால் தாக்கி ஒரு அறையில் அடைத்தனர். பின்னர் அந்த கும்பல் ஒரு வாகனத்தை தோட்டத்திற்குள் கொண்டு வந்து தோட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த 37 ஆடுகளை வாகனத்தில் ஏற்றி திருடிச் சென்றுவிட்டனர்.
3 பேர் கைது
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு மாயவன் மேற்பார்வையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஸ்ரீவைகுண்டம் தெற்கு மாடத் தெருவை சேர்ந்த பூல்பாண்டி மகன் முத்து சங்கர் (24), அம்பலச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுடலை கண்ணன் (22), கருங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சொரிமுத்து மகன் உச்சினிமாகாளி (26), ஆகியோர் சேர்ந்து சரக்கு வாகனத்தில் ஆடுகள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 26 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட தனிப்படை போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.