200, 100 ரூபாய் கள்ளநோட்டுகள் தயாரித்த 3 சிறுவர்கள் கைது
வேதாரண்யத்தில் 200, 100 ரூபாய் கள்ளநோட்டுகள் தயாரித்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
நாகை,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலத்தில் 3 பேர் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளநோட்டுகள்
அப்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 14 மற்றும் 15, 16 வயதுடைய 3 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை கத்தரிப்புலத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு சொந்தமான ஸ்டூடியோவில் ஸ்கேன் செய்து, அந்த கள்ளநோட்டுகளை பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
இதையடுத்து கள்ளநோட்டுகளையும், ஸ்கேன் எந்திரம், கணினி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 சிறுவர்கள் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.