போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது


போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது
x

பூந்தமல்லி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி,

பூந்தமல்லி சீரடி சாய் நகரை சேர்ந்தவர் வடிவேலு (வயது 50). வீடுகள் கட்டி விற்பனை செய்யும் பில்டர் ஆவார். இவரிடம் ரியல் எஸ்டேட் தரகர்களான செல்வகுமார் மற்றும் சின்னத்துரை ஆகியோர் அறிமுகமாகி பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் செந்தூர்புரம் என்ற இடத்தில் சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த கல்யாணி மற்றும் தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமாக 2,400 சதுர அடி காலி பட்டா இடம் விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அந்த இடத்தை அந்தோணி ஜெனித் என்பவர் பவர் வாங்கி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து வடிவேலு அந்த இடத்தை வாங்க முடிவு செய்தார். கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பவர் பெற்றுள்ள அந்தோணி ஜெனித், ஆண்ட்ரூஸ், செல்வகுமார், சின்னதுரை மற்றும் குருசாமி ஆகியோரிடம் ரொக்கமாகவும் வரைவு காசோலையாகவும் ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வடிவேலு கொடுத்து நிலத்தை வாங்கியுள்ளார்.

போலி ஆவணம்

இந்த நிலையில் தகவல் அறிந்த நிலத்தின் உரிமையாளரான கல்யாணி மற்றும் தியாகராஜன் ஆகியோர் குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று தான் யாருக்கும் நிலத்தை பவர் செய்து கொடுக்கவில்லை என்றும், தன்னுடைய இடத்தை போலியான ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்து மோசடி நடந்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி குன்றத்தூர் சார் பதிவாளர் வடிவேலுவை தொடர்பு கொண்டு தாங்கள் பத்திர பதிவு செய்த இடத்தை நில புரோக்கர்களான சின்னதுரை, செல்வகுமார், ஆண்ட்ரூஸ் மற்றும் அந்தோணி ஜெனித் ஆகியோர் போலியான ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக தெரிவித்தார்.

3 பேர் கைது

இதையடுத்து போலி ஆவணங்கள் தயாரித்து தன்னை மோசடி செய்த ஆண்ட்ரூஸ், அந்தோணி ஜெனித், செல்வகுமார், சின்னதுரை மற்றும் குருசாமி ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் வடிவேலு புகார் கொடுத்தார்.

இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், போலி ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் வழக்கு பதிவு செய்து வடிவேலுவிடம் ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்ட பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (39), செல்வகுமார் (38),குருசாமி (62) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

மற்றொரு சம்பவம்

சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை, சச்சிதானந்தம் தெருவை சேர்ந்தவர் எபினேசர் (56). இவர் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஓட்டேரி, அயனாவரம், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.1 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் ஓட்டேரி போலீசில் எபினேசர் மீது புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த எபினேசரை ஓட்டேரி மேம்பாலம் அருகே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஆகியோர் மடக்கி பிடித்தனர்.


Next Story