விதிகளை மீறிய 3 கட்டிடங்களுக்கு 'சீல்'
ஊட்டியில் விதிகளை மீறிய 3 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, வீட்டுக்கு என்று அனுமதி பெற்று தங்கும் விடுதி மற்றும் வணிக கட்டிடங்களாக மாற்றக்கூடாது. 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை போன்ற விதிமுறைகள் உள்ளன. இந்த விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில், நகரமைப்பு ஆய்வாளர் மீனாட்சி மற்றும் பணியாளர்கள் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறியதாக ஆல்ப்ஸ் ஹவுஸ் சாலையில் உள்ள தனியார் ஓட்டல், அப்பர் பஜாரில் பேக்கரி மற்றும் கோத்தகிரி சாலையில் பேக்கரி என 3 கட்டிடங்களில் உள்ள 14 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து ஆய்வாளர் மீனாட்சி கூறுகையில், 2 கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு உள்ளது. ஒரு கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டது. ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போது 3 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது என்றார்.