ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
வள்ளியூர்:
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளம் பஞ்சாயத்து கூடங்குளம் பைபாஸ் சாலை அருகில் ரூ.13.16 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம், கூடங்குளம் இந்து நடுநிலைப்பள்ளி வடக்கு தெருவில் ரூ.8.91 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, வைராவிகிணறு முதல் குறிஞ்சிகுளம் வரை ரூ.77.58 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை, உதயத்தூரில் ரூ.605 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாக 85 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கும் சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
மேலும் திருவம்பலாபுரம் பஞ்சாயத்து திருவம்பலபுரத்தில் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை, ரூ.14 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் சபாநாயகர் திறந்து வைத்தார்.
தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ.3 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
தங்கு தடையின்றி குடிநீர்...
அந்தந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசுகையில், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம பகுதிகள் பயன்பெறும் வகையில் ரூ.605 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதன் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இன்னும் 15 மாத காலத்தில் பணிகள் முழுமையாக நிறைவு பெறும்போது அனைத்து வீடுகளுக்கும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் தங்கு தடையின்றி வினியோகிக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ், பஞ்சாயத்து தலைவர்கள் கூடங்குளம் வின்சி மணியரசு, உதயத்தூர் கந்தசாமி மணிகண்டன், சிதம்பராபுரம் பேபி முருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ராமசாமி, ராதாபுரம் யூனியன் ஆணையாளர்கள் நடராஜன், பிளாரன்ஸ் விமலா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, இந்து சமய அறங்காவலர் குழு உறுப்பினர் சமூகை முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்மார்ட் வகுப்பறை
முன்னதாக திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் புதிய ஸ்மார்ட் வகுப்பறையை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, திறந்து வைத்து பேசினார். கல்லூரி முதல்வர் சுந்தர வடிவேல் வரவேற்று பேசினார். திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா சுயம்புராஜன், தொழில் அதிபர் நவ்வலடி சரவணகுமார், திசையன்விளை லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் சந்திரசேகர் நன்றி கூறினார்.