கொரோனா தடுப்பு மருந்தை வினியோகம் செய்ய வாகன ஒப்பந்தம் வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி
கொரோனா தடுப்பு மருந்தை வினியோகம் செய்ய வாகன ஒப்பந்தம் வாங்கி தருவதாக ரூ.3.10 கோடி மோசடி செய்த உத்தரபிரதேசத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் அப்சல் (வயது 55). இவர் அங்குள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், 2021-ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்தார்.
அதில், கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகம் செய்ய வாகனங்கள் தேவை" என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த ஹெர்மன் சபர்வால் (43) என்பவரை அப்சல் தொடர்பு கொண்டு இது குறித்து விவரம் கேட்டார். அப்போது ஹெர்மன் சபர்வால், தன்னை மத்திய அரசு சுகாதார துறை அதிகாரி போல் காட்டிக்கொண்டு, மத்திய அரசின் சுகாதாரத் துறையில் இருந்து கொரோனா தடுப்பு மருந்து பொருட்களை தமிழ்நாட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகம் செய்யும் ரூ.100 கோடி மதிப்பிலான வாகன ஒப்பந்தத்தை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினார்.
ரூ.3.10 கோடி
ேமலும் இந்த ஒப்பந்தத்தை பெற அதிகாரிகளுக்கு கமிஷன் மற்றும் அரசுக்கு முன்பணம் செலுத்த வேண்டி உள்ளதாக ஹெர்மன் சபர்வால் கூறினார். இதை உண்மை என நம்பிய அப்சலை டெல்லி அழைத்துச்சென்று அங்குள்ள மத்திய அரசு அலுவலகத்தில் சிலரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது என்று கூறி அப்சலிடமிருந்து ரூ.3.10 கோடி வரை வங்கி மூலம் ஹெர்மன் சபர்வால் பெற்றுக் கொண்டார். ஆனால் அதன் பிறகு ஹெர்மன் சபர்வால் தலைமறைவாகிவிட்டார்.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்சல், இந்த மோசடி குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தரபிரதேசத்தில் தலைமறைவாக இருந்த ஹெர்மன் சபர்வாலை கைது செய்தனர்.
நேற்று காலை அவரை சென்னை கொண்டு வந்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.