3½ கோடி பாடப்புத்தகங்கள், 11 வகை கல்வி உபகரணங்கள் தயார்


3½ கோடி பாடப்புத்தகங்கள், 11 வகை கல்வி உபகரணங்கள் தயார்
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு வழங்க 3½ கோடி பாடப்புத்தகங்கள், 11 வகை கல்வி உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கூறினார்.

திண்டுக்கல்

பாடநூல் கழக கிடங்கு

தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு பாடப்புத்தகங்கள் மாவட்டந்தோறும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் கிடங்கில் பாடப்புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது 9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள திராவிட மொழி குடும்பம் எனும் பாடத்தை பற்றி, அமைச்சர் இ.பெரியசாமியிடம், திண்டுக்கல் ஐ.லியோனி நினைவுபடுத்தினார். அதையடுத்து அந்த பாடத்தை அமைச்சர் வாசித்து பார்த்தார்.

3½ கோடி பாடப்புத்தகங்கள்

பின்னர் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 3 கோடிேய 56 லட்சம் பாடப்புத்தகங்கள் தயாராக இருக்கின்றன. அந்த பாடப்புத்தகங்களுடன் 11 வகையான இலவச கல்வி உபகரணங்களும் வழங்குவதற்கு தயாராக உள்ளன. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும் பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் பணியை முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார்.

பள்ளிகள் திறக்கப்படும் நாளில் மாணவர்களுக்கு அவை வழங்கப்படும். தமிழகத்தில் 75 அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இருக்கிறது. இந்த ஆங்கில வழி கல்வி மோகத்தால், தனியார் பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர் சேர்க்கின்றனர். எனவே அரசு பள்ளியில் ஒரு மாணவர் சேர்ந்தால் 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி வரை செலவின்றி படிக்கலாம். அதேபோல் புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளை பெற்றோர் சேர்க்க வேண்டும்.

புதிய பாடம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதி பற்றி 9-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் திராவிட மொழி குடும்பம் எனும் பாடத்தில் ஒரு பகுதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும் அவருடைய நூற்றாண்டு விழா நிறைவு நாளையொட்டி அவரை பற்றி சிறப்பு பாடத்தை சேர்ப்பதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மூலம் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அடுத்த ஆண்டு முழுபாடத்தை சேர்ப்பதற்கு உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தட்டுப்பாடு இல்லை

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறுகையில், பள்ளிகள் திறப்பதற்கு முன்பே பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். பள்ளிகள் திறந்ததும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டது, என்றார்.


Related Tags :
Next Story