உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3½ கோடி வருவாய்


தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:46 PM GMT)

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3½ கோடி வருவாயாக கிடைத்தது. தங்கம், வெள்ளியிலான வேல்களும் கிடைத்தன.

திண்டுக்கல்

உண்டியல் காணிக்கை

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியல்களில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் பழனி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ெதாடங்கியது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் மணிமாறன், ராஜசேகரன், தேனி உதவி ஆணையர் கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

ரூ.3½ கோடி

முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 29 லட்சத்து 10 ஆயிரத்து 705 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 393 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 999 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட 10 கிலோ 152 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.1 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 900-ம், தங்கம் 324 கிராம், வெள்ளி 14 கிலோ 895 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 491-ம் கிடைத்தன. இதன்மூலம் கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.3 கோடியே 49 லட்சத்து 4 ஆயிரத்து 605 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 1 கிலோ 323 கிராம், வெள்ளி 25 கிலோ 47 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 884-ம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story